கொரோனா தடுப்பூசி செலுத்தாமல் வெளியே நடமாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ள நிலையில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. இதுவரை 1,29,028 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் 1,26,855 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனிடையில் 1874 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். கொரோனா பாதிப்பு விகிதத்தை முழுமையாக குறைக்கும் நடவடிக்கையில் மாநில சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது.
இதற்கிடையில் உலகளவில் 74 நாடுகளில் ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு தற்போது வரை இந்தியாவில் 4 நபர்களுக்கு கண்டறியப்பட்டு உள்ளதால் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரியில் தற்போதுவரையிலும் முதல் தவணை கொரோனா தடுப்பூசியை 7,70,000 நபர்கள் செலுத்தியுள்ளனர். 2-வது தவணை தடுப்பூசியை 4,48,000 பேர் செலுத்தியுள்ளனர்.
எனவே மாநிலம் முழுவதும் 77 சதவிதத்தினர் தடுப்பூசி செலுத்தியுள்ள நிலையில் விடுபட்டவர்கள் சிறப்பு முகாம்களில் போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. எனினும் சிலபேர் முன்வராததால் கட்டாய கொரோனா தடுப்பூசி சட்டம் புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதாவது பொது சுகாதார சட்டம் 1973-ன் பிரிவு 54(1) விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அதையும் மீறி வெளியே நடமாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.