இந்தியாவில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களில் ஒமிக்ரான் தொற்று உச்சத்தை தொடும் என்றும் இது தொடர்பாக யாரும் பயப்பட தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஜனவரி முதல் பிப்ரவரி மாதங்களில் ஒமிக்ரான் தொற்று உச்சத்தை தொடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இதுகுறித்து யாரும் பயப்பட தேவையில்லை என்றும் நோயின் தீவிரம் குறைவாவே இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டெல்டா வகை வைரசை விட ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடிய தன்மை உடையது என்பதால் பெரும்பாலானோர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதுகுறித்து நடைபெற்ற ஆய்வுகளில் ஏராளமானோர் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டாலும், நோயினால் தீவிர உடல்நலக் குறைபாடு ஏற்படாது. ஆகவே ஒமிக்ரான் பரவும் வேகம் தான் அதிகமே தவிர பயப்பட தேவையில்லை. உலக அளவில் இதுவரை 77 நாடுகள் தான் ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது. இந்நிலையில் உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறியபோது “ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது ஆகும். டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் மிகவும் ஆபத்தானதாக இன்றும் கருதப்படுகிறது. ஆனால் டெல்டா வகை பாதிப்பு போன்று மருத்துவம் மற்றும் சுகாதார அமைப்புகளளுக்கு கடும் அழுத்தம் ஏற்படாது. இதற்கிடையில் அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அதிகரிப்பதே முதல் நோக்கமாக இருக்கிறது. அதன் மூலம் வயதானவர்கள் மற்றும் இணை நோய் இருப்பவர்களை தீவிர நோய்ப் பாதிப்பில் இருந்து பாதுகாக்க முடியும்” என்று அவர் கூறினார்.