Categories
மாநில செய்திகள்

மதுரை சித்த மருத்துவர் தயாரித்த “IMPRO மருந்துப்பொடியில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது”… தமிழக அரசு!!

மதுரை அரசு சித்த மருத்துவரின் 66 மூலிகைகள் அடங்கிய சூரணத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு சார்பில் மருத்துவ வல்லுநர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. மூலிகை சூரணத்தை மத்திய சித்த மற்றும் ஆயுர்வேத ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிந்துரைத்துள்ளதாக அந்த குழு தகவல் அளித்துள்ளது.

66 மூலிகை அடங்கிய சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் IMPRO எனும் மருந்துப்பொடியை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தெரிவிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையை சேர்ந்த சித்தமருத்துவர் இது தொடர்பான பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அதில் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் சீனாவில் அவர்கள் பாரம்பரிய மருத்துவ முறையை பின்பற்றுவதாலே நோய் தொற்று குறைக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் பழங்காலம் முதலே பயன்பாட்டில் உள்ள சித்த மருத்துவத்தை பயன்படுத்தி கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க பலரும் முயன்று வருகின்றனர். அதனடிப்படையில் முடக்கத்தான் இலை, வெட்டிவேர், சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 66 மூலிகைகள் கொண்டு நோய்எதிர்ப்பு சக்தி தன்மை கொண்ட மருத்துவப்பொடிகள் தயாரித்துள்ளேன். இந்த மருந்து உடலில் எந்த விதமான தீங்கையும் ஏற்படுத்தாது.

இதுகுறித்து மத்திய மாநில அரசுகளுக்கு பலமுறை தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் அதனை பரிசோதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது இது குறித்து பதில் தர தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி, சித்த மருந்தினை ஆய்வு செய்த தமிழக அரசு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது.

Categories

Tech |