மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஒப்பந்தம் நடப்பு ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கையெழுத்தாகும் என்று மக்கள் நலவாழ்வுத்துறை செயலர் தெரிவித்துள்ளதாக மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன் தகவல் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “மதுரையில் 2019 ஆம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுவரை பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ஆனால் இதே காலகட்டத்தில் தொடங்கப்பட்ட மற்ற மருத்துவமனைகளில் மாணவர் சேர்க்கை ஆரம்பித்துவிட்டது. இதுதொடர்பாக இந்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் மற்றும் இணைச் செயலர் ஆகிய இருவரையும் சந்தித்து கோரிக்கைகள் வைத்தேன்.
மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 2000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதெற்கென நிர்வாக அனுமதியையும் விரைவாக அமைச்சரவை ஒப்புதல் பெற்று முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். அதேபோல் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட இன்னும் ஏன் காலதாமதம் ஆகிறது என்று கேட்டேன்.
அதற்கு மார்ச் மாதத்தின் இறுதிக்குள் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளனர்.மேலும் இதுதொடர்பாக நிர்வாகத்திற்குத் தேவையான அலுவலர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளார்.