ரயிலில் கடத்திய ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பொதுமக்கள் பாராட்டியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோம நாயக்கன்பட்டி ரயில்வே கேட் அருகில் பெங்களூரை நோக்கி செல்லும் பாசஞ்சர் ரயிலில் கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் உதவியாளர் அருள் பாண்டியன், கிருஷ்ணன் போன்றோர் அந்த இடத்திற்கு செல்வதற்கும் பாசஞ்சர் ரயிலில் மர்மநபர்கள் ரேஷன் அரிசி கடத்திச் சென்று விட்டனர். இதனையடுத்து பச்சூர் ரயில் நிலையம் சென்ற அந்த ரயிலை வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் சாலை வழியாக 15 கிலோமீட்டர் தொலைவில் ஜீப்பில் விரட்டினர்.
அதன்பின்னர் பச்சூர் ரயில் நிலையத்தில் நின்ற அந்த பாசஞ்சர் ரயிலில் அதிகாரிகள் ஏறி பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது கடத்திய அரிசி மூட்டையினை பயணிகள் இருக்கைக்கு அடியில் மற்றும் கழிவறையிலும் மறைத்து வைத்ததை அதிகாரிகள் கண்டறிந்து பறிமுதல் செய்து ரயில் நிலையத்தில் இறக்கி வைத்தனர். இதனைதொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட 3 1/2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் தாலுகாவில் கொண்டு சேர்த்தனர். இதனால் வட்ட வழங்கல் அதிகாரியை பொதுமக்கள் பாராட்டியுள்ளனர் .