கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த கருப்பசாமி(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்ற நபருக்கும், சென்னையில் சாப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணமும் 27ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட, நேற்று முன் தினம் பெண் அழைப்பு நிகழ்ச்சி தடபுடலாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருமணம் செய்யவிருந்த மணமகனும், மணமகளும் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்ட நிகழ்வுகள் உட்பட அனைத்தும் மகிழ்ச்சியாக நடந்துகொண்டிருந்தது.
இதைத்தொடர்ந்து மாப்பிள்ளை வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பி வரவே இல்லை. திருமணத்திற்கு பயந்து மாப்பிள்ளை மண்டபத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார் என்ற செய்தியை கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாருடன் சலசலப்பில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தப்பியோடிய மாப்பிள்ளையை மடக்கிப்பிடித்து விசாரிக்கையில், தான் ஒரு பெண்ணை நீண்ட வருடங்களாக காதலித்து வந்ததாகவும், திருமணத்தில் விருப்பம் இல்லாமல் அன்றைய தினம் ஓடி வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து மிகவும் மன வருத்தத்துடன் பெண் வீட்டார் திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் நிறுத்திவிட்டு அவர்களது வீட்டிற்கு சென்றனர். தற்போது இந்த செய்தி குறித்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வரும் நெட்டிசன்கள், திருமணத்திற்கு முந்தைய நாள் ஓடிச் செல்ல இருந்த தைரியம், தனது காதலை பெற்றோர்களிடம் எடுத்துரைக்க அந்த ஆண்மகனுக்கு இல்லையா? என்றும், ஒரு பெண்ணின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்க போகிறோமே ? என்ற குற்ற உணர்ச்சி கூட இல்லாமல் செயல்பட்டு உள்ளார் என்று தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.