திருமணம் முடிந்து நான்கு நாட்களில் புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த விஷால் என்பவர் நிஷா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் இருவரின் குடும்பத்தாரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் இருவரும் பேசி இரண்டு குடும்பமும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து 4 தினங்களுக்கு முன்பு விஷால்-நிஷா திருமணம் நடந்துமுடிந்தது.
மகிழ்ச்சியுடன் இத்தம்பதியினர் வாழ்க்கையை தொடங்கிய நிலையில் விஷால் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு நேற்றுமுன்தினம் வெளியில் சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் விஷாலை தேடிய நிலையில் அங்கிருந்த ரயில் தண்டவாளம் ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
விஷால் உயிரிழந்த சோகம் தீர்வதற்குள் நேற்று காலை நிஷா வீட்டில் தூக்கில் தொங்கிய படி சடலமாக மீட்கப்பட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் இரண்டு குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் முடிந்து நான்கு நாட்களில் புதுமண தம்பதி மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.