காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள மணமேடு செங்கல் சூளையில் கூலி தொழிலாளியான மாரியப்பன் என்பவர் வேலை பார்த்து வருகின்றார். இவரும் அதே செங்கல் சூளையில் வேலை பார்த்த சந்தியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2 வருடத்திற்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு பத்து மாதத்தில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மாரியப்பன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான தென்காசிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மதுபோதையில் இருந்த மாரியப்பனை சந்தியா கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மாரியப்பன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டு சிறிது நேரம் கழித்து மீண்டும் திரும்பி வந்துள்ளார். அப்போது சந்தியா தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து மாரியப்பன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சந்தியாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.