காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வி. சித்தூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான ஆண்டவர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சனூத்து பகுதியில் வசிக்கும் பிரியங்கா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு பிரியங்காவின் பெற்றோர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் வட மதுரையில் உள்ள ஒரு கோவிலில் வைத்து ஆண்டவரும், பிரியங்காவும் திருமணம் செய்துள்ளனர்.
இதனை அடுத்து பெற்றோர் பிரித்து விடுவார்களோ என்ற அச்சத்தில் காதல் ஜோடிகள் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்துள்ளனர். அதன்பிறகு இரு தரப்பு பெற்றோரையும் காவல்துறையினர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பின் ஆண்டவரின் பெற்றோருடன் மணமக்களை காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.