திருச்சி அருகே மண்ணச்சநல்லூரில் காதல் தோல்வியால் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஏரி மெஷின் தெருவில் வசித்து வந்த காயத்ரி என்கின்ற திருநங்கையான தனியே வீடு எடுத்து வசித்து வந்தார். அதே தெருவிலேயே அவருடைய தந்தை ஜோதியும் வசித்து வருகிறார். இருவருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், காயத்ரி இன்று அதிகாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது குறித்து அவருடன் தங்கியுள்ள சக திருநங்கைகளிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காயத்ரி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், ஆனால் அந்த வாலிபர் காயத்ரியை திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறி விட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டதால், மனமுடைந்த காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.