2 லாரிகள் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியை அடுத்த தெக்கலூர் மேம்பாலம் அருகில் கோவை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அதே திசையில் பெங்களூரில் இருந்து கோவை நோக்கி கொரியர் தபால்களுடன் மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை நாமக்கல்லை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் ஓட்டினார். இந்நிலையில் முன்னால் சென்ற லாரியின் பின்புறம் கொரியர் தபால் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கொரியர் லாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அப்போது லாரியின் இடிபாடுகளில் சிக்கிய செந்தில்குமார் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து லாரி செந்தில்குமாரை மீட்க முயன்றனர்.
ஆனால் செந்தில்குமாரின் கால் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டதால் அவர்களால் மீட்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் அவினாசி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த செந்தில்குமாரை மீட்டு அவினாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு செந்தில்குமாருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் முன்னால் சென்ற லாரியின் பின்புறம் சேதமடைந்தது. மேலும் நிற்காமல் சென்ற லாரியை கருமத்தம்பட்டி அருகில் அவினாசி காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர்.