Categories
மாநில செய்திகள்

லாரிகள் வேலை நிறுத்தம் – பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!!

ஆவின் நிறுவனத்திற்கு பால் லாரி ஏற்றி வரும் உரிமத்தை ’கிரிஸ்டி புட்ஸ்’ எனும் தனியார் நிறுவனத்திற்குத் தாரை வார்க்கும் விதமாக தற்போதுள்ள லாரி உரிமையாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க மாநிலத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பால் கொள்முதல் நிலையங்களில் இருந்து ஆவின் பால் பண்ணைகளுக்கு பால் ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் நேற்று (14.02.2020) நள்ளிரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

வாகன எரிபொருள் விலை உயர்வு, வாகனப் பராமரிப்பு, காப்பீட்டுக் கட்டணம், ஓட்டுநர் உள்ளிட்ட பணியாளர்கள் சம்பள உயர்வு என லாரி உரிமையாளர்களின் செலவினங்கள் பலமடங்கு உயர்ந்துவிட்ட நிலையில், அது எதையும் கணக்கில் கொள்ளாமலேயே கடந்த 2011ஆம் ஆண்டு நிர்ணயம் செய்த, ஒரு கிலோ மீட்டருக்கு 27 ரூபாய் 60 காசுகள் என்கிற வாடகை முறையையே கடைபிடித்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் அந்த ஒப்பந்தமும் கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி காலாவதியாகிவிட அப்போதைய நிர்வாக இயக்குநர் காமராஜ் ஐஏஎஸ், ஆவின் ஒன்றியங்கள் கவனித்து வந்த லாரி உரிமையாளர்கள் ஒப்பந்த முறையை ரத்து செய்து, தமிழ்நாடு முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு இயக்கப்படும் லாரி ஒப்பந்தத்தை ’கிறிஸ்டி புட்ஸ்’ எனும் நிறுவனத்திற்கு தாரை வார்க்கும் விதமாக இணையத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததோடு, லாரி வாடகையையும் உயர்த்தாமல் காலம் தாழ்த்தி வந்திருக்கிறார்.

லாரிகள் வேலை நிறுத்தம் - பால் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

லாரி உரிமையாளர்களுக்கு ஆவின் நிறுவனம் கடும் நெருக்கடியை அளித்து லாரி உரிமையாளர்களாகவே ஆவின் நிறுவன ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற வேண்டும் என முன்னாள் ஆவின் நிர்வாக இயக்குநர் போட்டுக் கொடுத்த திட்டத்தின்படி, தற்போதைய ஆவின் இணை நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் தமிழ்நாடு முழுவதும் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாலும், லாரி வாடகை பல ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருப்பதால் இத்தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழக்கும் சூழல் உருவாகி வருவதாலும் தமிழ்நாடு முதலமைச்சர் இவ்விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |