மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி பகுதியில் சுருதி பிரியன் என்பவர் வசித்து வருகிறார். இவரும் இவருடைய நண்பர் ஊத்துக்கோட்டை பகுதியில் வசிக்கும் சீனிவாசன் என்பவரும் சென்னை மதுரவாயலில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளனர். இந்நிலையில் கல்லூரி முடிந்த பிறகு நண்பர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் நொளம்பூர் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது, அவ்வழியாக சிமெண்ட் மூட்டை ஏற்றி வந்த லாரி இவர்களை மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சுருதி பிரியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்து சீனிவாசனை மீட்டு சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று சுருதி பிரியனின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரான புருஷோத்தமன் என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.