லாரியை தாறுமாறாக ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு ஓட்டுனர் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காட்டிற்கு முட்டை லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நாமக்கல்லில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்த லாரியை கேரள மாநிலத்தை சேர்ந்த முகமது லத்தீப் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் இந்த லாரியானது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொசவம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென லாரி சாலையில் தாறுமாறாக ஓடி மின்கம்பத்தில் மோதியது. இதனையடுத்து மின்கம்பம் சாய்ந்து பிறகும் லாரி நிற்காமல் சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மரத்தின் கிளையை உடைத்து கொண்டு அங்கிருந்த பெட்டி கடை மீது மோதி விட்டது. இந்த விபத்தில் லாரியில் இருந்த ஆயிரம் முட்டைகள் உடைந்து லாரி முற்றிலும் சேதமடைந்தது.
அதன்பிறகு அச்சத்தில் லாரி ஓட்டுனர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். மேலும் லாரி மோதியதில் மின்கம்பம் சாய்ந்ததால் கொசவம்பாளையம் ரோடு, பல்லடம் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் படி அங்கு சென்ற மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை வைத்து மின்னிணைப்பு வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து லாரியை அப்புறப்படுத்திய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரை வலைவீசி தேடி வருகின்றனர்.