வேலூர் அருகே சகோதர சகோதரியுடன் கல்குவாரியில் உள்ள குட்டையில் குளிக்கச் சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், தொரப்பாடி ,காந்திதெருவை சேர்ந்த நவ்ஷாத் என்பவரின் இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் நான்கு பேரும் சேர்ந்து சித்தேரியில் உள்ள கல்குவாரி குட்டையில் விளையாட சென்றனர். அப்போது மூத்த மகள் மற்றும் அவரது சகோதரர்கள் நீரில் இறங்கி குளித்துள்ளனர். இதில் எதிர்பாராதவிதமாக நசியா நீரில் மூழ்கியுள்ளார். நீச்சல் தெரியாத காரணத்தினால் அவர் மீண்டும் கரைக்கு வர முடியவில்லை.
இதை கண்ட மற்ற மூன்று பேரும் கூச்சலிட, அப்பகுதி மக்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். இதையடுத்து காவல் துறைக்கு தகவல் அனுப்பப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையில் உடன் வந்த அவர்கள் நீரில் மூழ்கிய நசியாவை தேடினர். மாலை ஆகியும் அவர் உடல் கிடைக்காததால், நாளை அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் உதவியுடன் தேட உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.