ஆயுள்காப்பீடு நிறுவனத்தினுடைய (LIC) பொதுப்பங்குகளை பெறுவதில்20 % அந்நிய நேரடி முதலீடுக்கு வழிவகுக்கும் அடிப்படையில் அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டத்தில் (எஃப்இஎம்ஏ) மத்திய அரசு திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது. இது குறித்து அறிவிக்கை அந்நிய செலாவணி மேலாண்மை திருத்த விதிகள் எனும் பெயரில் அரசிதழிலும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் எல்ஐசியில் 20 % அந்நிய நேரடி முதலீட்டை அரசு அனுமதி இன்றி நிறுவனம் தானாகப் பெறலாம் என்பது குறித்து எல்ஐசி விதியில் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளது.
இத்திருத்தத்தின் வாயிலாக தற்போதைய அந்நியநேரடி முதலீட்டு விதிகளின் அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு 20 % வரை அனுமதி வழங்கப்படுவதுபோல, எல்ஐசி-யிலும் அனுமதிக்கப்படும். இதற்கு முன்பாக பொதுபங்கு வெளியீட்டில் களமிறங்க அனுமதி கோரி எல்ஐசி சாா்பாக சமா்ப்பிக்கப்பட்ட பரிந்துரைக்கு பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையம் (செபி) சென்ற மாதம் ஒப்புதல் வழங்கியது.
எல்ஐசியின் இப்பங்கு வெளியீட்டின் வாயிலாக மத்திய அரசின் 5 % பங்குகள் ரூபாய் 63,000 கோடிக்கு விற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவையும் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியதை அடுத்து, எல்ஐசியில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் கொள்கை திருத்தத்துக்கு தொழில்மேம்பாடு மற்றும் உள்நாட்டு வா்த்தகத்துறை (டிபிஐஐடி) சென்ற மாா்ச் 14-ஆம் தேதி ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.