லஞ்சம் வாங்கி அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி பகுதியில் அருண் பிரசாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் வேமாண்டம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் செம்மம் பாளையம் பகுதியில் வசிக்கும் கார்த்திக் என்பவர் தனது அரை ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது கார்த்திக்கிடம் அருண் பிரசாத் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கார்த்திக் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கார்த்திக் அருண் பிரசாத்திடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அருண் பிரசாத்தை கையும் களவுமாக பிடித்து விட்டனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அருண் பிரசாத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.