500 ரூபாய் பணத்தை கேட்டு மனைவியை கணவர் அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரன்பட்டினம் பகுதியில் கூலி தொழிலாளியான சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்தம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் குலசேகரன்பட்டினம் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு சுடலை முத்தம்மாள் தம்பதியினரின் மகனான பெருமாள் வீட்டிற்கு உறவினர்கள் வந்துள்ளனர். உறவினர்கள் அனைவரும் பேசிக்கொண்டு இருந்தபோது திடீரென அங்கு சென்ற சுடலை எனது 500 ரூபாய் பணத்தை யார் எடுத்தார்கள் எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனை அடுத்து முத்தம்மாளிடம் நீ தான் எனது பணத்தை எடுத்திருக்கிறாய் எனவும், அதனை திரும்பி தா எனவும் கூறி அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் கோபத்தில் சுடலை அரிவாளால் முத்தம்மாளை சரமாரியாக வெட்டியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்தம்மாளின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.