மாயமான பெண் சாலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாணிக்கங்கோட்டை கிராமத்தில் நந்தினி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நந்தினிக்கும், கண்ணன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் சென்னையில் வாழ்ந்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு 1 வயதில் ஆண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு நந்தினி தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பிறகு குழந்தைக்கு தங்க நகை எடுப்பதற்காக நந்தினி தனது தாயுடன் சென்றுள்ளார். தேவக்கோட்டை பேருந்து நிலையம் வந்தவுடன் நந்தினி தனது குழந்தையை தாயிடம் கொடுத்து விட்டு கழிவறைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் நீண்ட நேரம் ஆகியும் நந்தினி திரும்பி வராததால் பதற்றமடைந்த தாயார் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். ஆனாலும் நந்தினி கிடைக்காததால் அவரது தாய் தேவகோட்டை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் நந்தினி அவரது தாயை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின் மணக்குடி பகுதியில் நந்தினி சடலமாக கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நந்தினியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கடந்த 3 நாட்களாக நந்தினி எங்கு தங்கியிருந்தார்? அவரை கடத்தினார்களா அல்லது யாரும் விஷம் கொடுத்து கொலை செய்தனரா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.