நித்திரவிளையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நித்திரவிளை பகுதியில் கிருஷ்ணகுமார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக தற்போது புதிதாக கட்டியிருக்கும் காஞ்சிபுரத்தில் உள்ள தனது வீட்டில் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார். இவர் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் வீட்டில் எல்லோரும் உறங்கி கொண்டிருக்கும் போது வீட்டின் வெளியே ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மனைவி வெளியே சென்று பார்த்தபோது வீட்டின் முன்னே தீ கொழுந்து விட்டு எரிவதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து வீட்டின் முன்புறம் கண்ணாடி துண்டுகள் உடைந்து கிடந்தன. ஆனால் உயிர் சேதம், பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குண்டு வீசிய மர்ம நபர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அரசியல் காரணங்களுக்காக நடந்திருக்குமோ அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமோ என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதியில் இருப்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.