ஆற்றில் குளிக்கச் சென்ற தொழிலாளி மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அர்ச்சலாபுரத்தில் ரஞ்சித்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், மகாலட்சுமி, ஜீவிதா என்ற 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் ரஞ்சித்குமார் தனது நண்பரான அர்ஜுனன் என்பவருடன் ஈரோடு மாவட்டம் கோபி அருகிலுள்ள பவானி ஆற்றுக்கு மோட்டார்சைக்கிளில் குளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து நண்பர்களான 2 பேரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.
அதன்பின் அர்ஜுனன் குளித்துவிட்டு கரை திரும்பினார். ஆனால் ரஞ்சித்குமார் மட்டும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ரஞ்சித்குமார் ஆற்றின் ஆழமான இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. எனவே நீண்ட நேரமாகியும் ரஞ்சித்குமார் கரை திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அர்ஜுனன் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் ஆற்றில் இறங்கி நண்பரை தேடி பார்த்துள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் ரஞ்சித்குமாரை கண்டுபிடிக்க முடியாததால் அனைவரும் தேடுவதை நிறுத்தி விட்டு கரை திரும்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சித்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரஞ்சித்குமாரின் உடல் அந்த பகுதியில் மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த தீயணைப்புத்துறை வீரர்கள் ரஞ்சித்குமாரின் சடலத்தை கைப்பற்றினர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரஞ்சித்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.