சாலை பணிக்காக குழி தோண்டியபோது குழாய் சேதமடைந்து தண்ணீர் பொங்கி எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி பள்ளிப்பட்டியிலிருந்து 4 வழிச்சாலை அமைக்கும் பணியானது கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரை வரை நடந்து வருகிறது. இதனால் அரூர்-சேலம் சாலை வேலைக்காக பொக்லைன் எந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி, கூட்ரோடு, புதுப்பட்டி, எருமியாப்பட்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும் பிரதான ஒகேனக்கல் கூட்டு குடிநீர் குழாய் உடைந்து விட்டது.
இதனால் தண்ணீர் சுமார் 10 அடி உயரத்திற்கு பொங்கி எழுந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து குழாயில் உள்ள தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு உடைப்பு ஏற்பட்ட குழாயை சீரமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.