குடிநீர் சீராக வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கொண்டயம்பாளையம் ஊராட்சி லட்சுமி கார்டன் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்வதால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் குடிநீர் சீராக வழங்கும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் பொதுமக்கள் அனைவரும் திரண்டு கொண்டையம்பாளையம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோவில்பாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து காவல்துறையினர் கூறும்போதும் தனித்தனியாக கேட் வால்வு, மீட்டர் அமைக்கும் பணி ஒவ்வொரு வார்டுகளிலும் நடந்து வருவதாகவும், அந்த பணி நிறைவடைந்த பிறகு அனைவருக்கும் சீராக குடிநீர் வழங்கப்படும் எனவும் உறுதியளித்த பின்பு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.