மக்களவையில் ராகுல் காந்தி நான் ஒரு தமிழன் என்று தெரிவித்தது 8 கோடி தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவரான கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் காங்கிரஸ் கட்சியின் தலைவரான கே.எஸ் அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மக்களவையில் தமிழ்நாடு குறித்து பேசியது தொடர்பில் ராகுல் காந்தியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் ஒரு தமிழன்” என்று பதிலளித்தார்.
இது 8 கோடி தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்திய நாட்டில் இருக்கும் பன்முக கலாசாரத்திற்கு மதிப்பு கொடுப்பதோடு வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில் தலைவர் ராகுல் காந்தி இந்த கருத்தை மக்களவையில் அதிக எழுச்சியோடு தெரிவித்ததை குறிப்பிட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் நன்றி கூறி வரவேற்றுள்ளார்.
இதன் மூலமாக, தேசிய அளவில் ராகுல்காந்தி தெரிவித்த கருத்திற்கு தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்குரிய தலைவராக விளங்கும் முதல்வர் ஸ்டாலின் நன்றி கூறியிருப்பது மதசார்பற்ற சக்திகளுக்கு அதிக வலிமையை கொடுக்கும் என்று உறுதியோடு கூற விரும்புகிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.