கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று பெண் வக்கில் கொட்டும் மழையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருத்துவபுரத்தில் வக்கீல் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும், முளகுமூடு பகுதியைச் சேர்ந்த கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவருக்கும் கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனயடுத்து திருமணத்திற்கு பிறகு கணவர் வீட்டார் அதிகமாக வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பிரியதர்ஷினி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டடு கணவன்-மனைவி இருவரையும் தனியாக வீடு எடுத்து வாழ்வதற்கு அறிவுரை வழங்கினர். அதன்படி நாகர்கோவிலில் கணவன்-மனைவி இருவரும் குடியேறி வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் பிரியதர்ஷினியின் கணவர், அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகின்றது. இதனை அறிந்த பிரியதர்ஷினி கணவர் வீட்டிற்கு சென்றபோது அவரை வீட்டிற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி கணவரின் வீட்டின் முன் கொட்டும் மழையில் ரோட்டில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். ஆனாலும் பிரியதர்ஷினி தன் கணவருடன் சேர்த்து வைக்ககோரி தொடர் போராட்டத்தில் இருந்துள்ளார்.