கொரோனா தடுப்பூசி தொடர்பான தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்தியாவில் இணையதள பக்கம் உருவாக்கப்படுகிறது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் பணியில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவற்றுள் குறிப்பாக ரஷ்யா, தாங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறிந்து பதிவு செய்துவிட்டோம் என அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் போட்டி போட்டு தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இந்தியாவும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அதில் மூன்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை கண்டறிந்து, மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் தற்போது ஈடுபட்டுள்ளது. அவற்றுள் ஒரு தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் பரிசோதனையில் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த தடுப்பூசி பரிசோதனை வெற்றி கண்டால், அது உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் இந்தியாவில் உருவாக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் பற்றிய முழுமையான மற்றும் தெளிவான தகவல்கள் எதுவும் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டுவரப்படாமல் இருக்கின்றது. அதனால் தடுப்பூசி தயாரிப்பின் தற்போதுள்ள நிலை என்னவென்று பொது மக்களுக்கு தெரியவில்லை.
இந்த நிலையில் இந்த குறைபாடுகளை தீர்க்கும் வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பு மற்றும் தடுப்பூசி பரிசோதனையின் தற்போதைய நிலை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், அதிகாரப்பூர்வமான இணையதள பக்கம் ஒன்று தொடங்கப்பட இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. அந்த இணையதள பக்கம் அடுத்த வாரம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி குறித்த தகவல்கள் மட்டுமன்றி பல்வேறு நோய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் அந்த இணைய தள பக்கத்தில் முழுமையாக வெளியிடப்படும் என்று மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது.