தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி கிடைக்காமல் பெண் உயிர் இழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் வின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக டெல்லியில் தலை விரித்து ஆடுகிறது. இந்நிலையில் டெல்லியில் சரிதா விஹார் என்ற இடத்தில் அப்பல்லோ மருத்துவமனை ஒன்று உள்ளது. அந்த மருத்துவமனைக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 62 வயதுள்ள ஒரு பெண் அழைத்துவரப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் படுக்கை வசதி இல்லாததால் அவர் வெகு நேரமாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனை வளாகத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்த பெண்மணியின் உறவினர்கள் ஆத்திரம் அடைந்து மருத்துவமனையை தாக்கியதுடன் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களையும் தாக்க முற்பட்டனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் “அந்த பெண் அதிகாலையில் மிகவும் மோசமான நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சையை மேற்கொண்டனர். ஆனால் போதுமான படுக்கை வசதி இல்லாததால் அவரை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி ஆலோசனை வழங்கினோம். ஆனால் அதற்குள்ளாகவே அந்தப் பெண்மணி உயிரிழந்துவிட்டார். மேலும் நோயாளி இறந்ததற்கு மருத்துவமனை சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்” என அந்த அறிக்கையில் கூறபட்டிருந்தது.