கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2019 ஆம் வருடம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. அதனால் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில் கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. அதனால் கொரோனா கட்டுபாட்டு விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் அதிகாரிகள் பலர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கும்பகோணத்தில் மிகவும் புகழ் பெற்ற சாரங்கபாணி சாமி கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகவும், 4000 திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட தலமாகவும் ,108 திவ்ய தேசங்களில் இந்த கோவில் மூன்றாவது தலமாகவும் பல சிறப்புகளை பெற்று விளங்கி வருகிறது. மேலும் தமிழகத்தில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் தேரோட்டம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டத்திற்கு அடுத்தபடியாக இந்த சாரங்கபாணி சுவாமி கோயில் தேரோட்டம் புகழ் பெற்றது. இந்த தேரில் நான்கு பிரம்மாண்டமான குதிரைகள் அமைக்கப்பட்டு இருக்கும். அந்தக் குதிரைகள் தேரோட்டத்தின் போது ஆடி அசைந்த படி தேரில் பவனிவருவதை காண ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு கூடுவார்கள்.
ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக இந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த வருடம் சித்திரைத் தேரோட்டம் வருகின்ற 26-ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில் அந்த தேரோட்டத்திற்கான கட்டமைக்கும் பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட கட்டுமானப் பணியாளர்கள் மிகத் தீவிரமாக செயல்பட்டு வந்தனர். ஆனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் இந்த ஆண்டும் இந்த தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் இந்த தேரோட்டத்தை காண ஆவலுடன் எதிர்பார்த்திருந்த பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இது மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.