கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளின் மனநோய் என பெலாரஸ் நாட்டின் அதிபர் வர்ணித்துள்ளார்.
சீனாவில் தொடங்கி உலக நாடுகள் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் ஐரோப்பிய நாடான பெலாரஸ் கொரோனா தொற்றை சிறிதும் பொருட்படுத்தாமல் இரண்டாம் உலகப் போரின் 75 வது வெற்றி விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது. அந்நாட்டின் தலைநகரான மின்ஸ்கில் நடைபெற்ற பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
இவ்விழாவில் பேசிய அந்நாட்டின் அதிபர் அலெக்சாண்டர் கூறுகையில், “கொரோனா தொற்று என எதுவுமில்லை. அது ஐரோப்பிய நாடுகளின் மனநோய் மட்டுமே வேறு எதுவும் இல்லை. இதற்காக ஊரடங்கு அமல்படுத்தினால் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்படும்” என பேசியுள்ளார். இவரது இக்கூற்று பொதுமக்களை மட்டுமின்றி உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது.
இதற்கு முன்னதாக தலைநகரில் ஹாக்கி விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தவர் பேசிய பொழுது, “மக்கள் அனைவரும் எப்போதும் போல் பணியினை செய்யுங்கள். வயல்வெளிகளில் வேலை பாருங்கள். ஐஸ் ஹாக்கி விளையாடுங்கள். மசாஜ் செய்துகொள்ளுங்கள். கொரோனா வைரஸுக்கு எதிரான சிறந்த மருந்து விளையாட்டுதான் எனக் கூறியிருந்ததார். பெலாரஸ் நாட்டில் இதுவரை 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போரினால் பாதிக்கப்பட்டு 130 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது