கொரோனா வைரஸ் வராமல் தடுக்க இந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர் வெளியிட்ட வீடியோ இன்னும் மருத்துவ ரீதியாக உண்மை என்று நிரூபிக்கப்படாததால் அதனை மருத்துவ கவுன்சில் தடை செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமடைந்து வருகின்றது. இதனால் நாடு முழுவதும் நோயாளிகளுக்கு போதுமான ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் வசதிகள் இல்லை. இந்தநிலையில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க இந்த ஏழு உடற்பயிற்சிகளை செய்தால் போதும் என்று ஒரு மருத்துவர் சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவில் மருத்துவர் மனிஷ் ஷர்மா 7 உடற்பயிற்சிகளை செய்ய சொல்கிறார். ஒவ்வொரு உடற்பயிற்சியையும் 30 நொடிகள் செய்யவேண்டும்.
இவற்றை செய்வதினால் கொரோனாவிலிருந்து இருந்து நம்மை நாம் காப்பாற்று கொள்ள முடியும். மேலும் இவ்வாறு செய்வதினால் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாது எனவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகி பலர் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வந்தனர். இதனையடுத்து இந்த வீடியோவை மருத்துவ கவுன்சில் ஆய்வு செய்ததில் எந்தவித அறிவியல் ஆதாரமும் இன்றி பகிரப்பட்டு வருவதாலும் மத்தியபிரதேச உடல்நலத் துறையும் இந்த வீடியோவின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதாலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வீடியோவினை வெளியிட்ட மருத்துவருக்கு மருத்துவ கவுன்சில் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள் எனவும் போலி செய்திகளை பரப்புவதன் மூலம் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும் சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட நிகழ வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவ கவுன்சில் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கிடையில் அந்த மருத்துவர் மனிஷ் ஷர்மா தொற்று ஏற்படாமலிருக்க முகக் கவசம் அணிதல் வேண்டும், அடிக்கடி கைகளை கழுவுதல் வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுதல் வேண்டும் போன்றவற்றை வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.