தினமும் 300 க்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழப்பதனால் அங்குள்ள சுடுகாடுகள் எரிந்துகொண்டே இருப்பது வேதனை அளிப்பதாக சுடுகாட்டில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கூறியிருக்கிறார்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது. குறிப்பாக டெல்லி மாநிலத்தில் தினந்தோறும் 300க்கும் மேற்பட்டோர் உயிரிலக்கின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் டெல்லியில் 350 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் உயிரிழக்கும் எண்ணிக்கையாகும்.
இதை தவிர்த்து பலர் வீடுகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் டெல்லி மாநிலத்தில் காசிபூரில் இருக்கக்கூடிய தகன மேடையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களை எரிக்க வரும் உறவினர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு பல மணி நேரங்கள் உடல்களுடன் காத்திருக்க வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
இதைப்பற்றி காசிப்பூர் சுடுகாட்டில் பணிபுரியும் ஒரு நபர் கூறியதாவது “தினமும் வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் இறந்து போகும் 300க்கும் அதிகமான உடல்களை இங்கே எரிக்கின்றோம். மேலும் பலர் ஆக்சிஜன் வசதி இல்லாமல் வீடுகளிலேயே இறந்து விடுவதாக அவர்களது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் உயிரிழந்தவர்களை எரிக்க வரும் உறவினர்களுக்கு டோக்கன்கள் வழங்கி இருக்கிறோம். இதனால் 24 மணி நேரமும் சுடுகாடு எரிந்து கொண்டே இருப்பது வேதனையை அளிக்கிறது” என அவர் கூறியுள்ளார்.