உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த வல்லுநர் குழு ஜனவரி 14 ஆம் தேதி சீனா வந்து கொரோனா வைரஸ் எவ்வாறு பரவத் தொடங்கியது என்பதை கண்டறிய உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் 2019ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் உலகிலேயே முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. அதன்பின் கொரோனா வைரஸ் உலகின் பிற நாடுகளிலும் வேகமாக பரவ ஆரம்பித்தது. சீனாவின் ஆய்வுகூடத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டதாக அமெரிக்க அரசு தொடர்ந்து தன் வாதத்தை முன்வைத்து வந்தாலும் சீன அரசு தொடர்ந்து அதை மறுத்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் உலக சுகாதார அமைப்பிடம் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவத்தொடங்கியது என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்கும் விதமாக உலக சுகாதார அமைப்பின் அறிவியல் வல்லுனர் குழுவினர்களை சீனாவில் ஆய்வு மேற்கொள்ள அறிவித்தார்கள்.
இந்த அறிவிப்பின்படி சீன நாட்டு தேசிய சுகாதார ஆணையம் உலக சுகாதார அமைப்பு வல்லுநர் குழு வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி சீனாவிற்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.