வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளை உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மத்திய சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை அவர்களின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் வந்து பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மத்திய சிறைச்சாலை அதிகாரிகள் கூறும்போது, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிளை சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பார்ப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகளை அவரது உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பார்ப்பதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே அடுத்த உத்தரவு வரும் வரையிலும் வேலூர் மத்திய சிறைச்சாலையில் இருக்கும் கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளை உறவினர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பார்க்க வரவேண்டாம் என தெரிவித்துள்ளனர். இதேபோன்று வேலூர் பெண்கள் சிறைச்சாலையில் 15 நாட்களுக்கு ஒரு முறை நடக்கும் நளினி முருகன் சந்திப்பு வருகிற 5 ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தடுப்பு வழிமுறையால் நளினி முருகன் சந்திப்பும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு சிறைச்சாலைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளித்தல், கைதிகளுக்கு கைகளை கழுவுவது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.