மும்பையில் மருத்துவமனை ஊழியர்கள் கொரோனா தடுப்பு மருந்தை உற்சாகமாக கை தட்டி வரவேற்றனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ்க்கு எதிரான தடுப்பு மருந்துகளான கோவிஷீல்டு,கோவாக்ஸின் ஆகிய மருந்துகளின் பல்வேறு கட்ட வெற்றிகரமான சோதனைக்கு பின்பு அவசர கட்ட பயன்பாட்டிற்காக தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி அந்த தடுப்பு மருந்துகளுக்கு அனுமதி அளித்தார். அதன் பின்னர் இந்தியாவில் இரண்டு கட்டங்களாக தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகைக்கு பிறகு இன்று நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இதற்காக தடுப்பூசி மையங்களில் பல விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி திட்டம் சுகாதார பணியாளர்களுக்கு இடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மும்பை கூப்பர் மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு தடுப்பூசி போடுவதற்காக வரும் பயனாளிகளை அம்மருத்துவமனையின் ஊழியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். அதன் பின்பு குடோனில் இருந்து மருத்துவமனைக்கு தடுப்பூசி வந்தபோது சுகாதார பணியாளர்கள் அனைவரும் உற்சாகமாக கைதட்டி வரவேற்றனர்.