வாணியம்பாடியில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி தனியார் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 118 பேர் கொரோனாவிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் சுகாதாரத்துறையினர் கொரோனா சிகிச்சை மையத்தில் இருமுறை கிருமி நாசினி தெளித்தல், அங்கு இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டுமென நகராட்சி நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா சிகிச்சை மையத்தில் மூன்று நாட்களுக்கு மேல் ஆகியும் கிருமி நாசினி தெளிக்கவில்லை என்றும், அங்கு இருக்கும் குப்பைகளை சுத்தம் செய்யாததால் கொசுக்கள் அதிகமாகி உடல்நலக்குறைவு அதிகமாகும் என்றும் நகராட்சி நிர்வாகம் மீது கொரோனா நோயாளிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மேலும் அங்கு சிகிச்சை பெற்று வர கூடியவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உணவு வழங்கினாலும், வீட்டிலிருந்து உறவினர்கள் மூலமாகவும் நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதனால் உணவு வழங்க வரும் உறவினர்கள் சமூக இடைவெளி இன்றி கொரோனா நோயாளியின் பக்கத்தில் நின்று உணவு வழங்குவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொரோனா நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.