கொரோனாவிற்கு பலியான முதியோரின் சடலம் மாற்றி கொடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்நிலையில் நாகர்கோவிலில் உள்ள மறவன் குடியிருப்பு பகுதியில் முதியவர் ஒருவர் தொற்றினால் பாதிக்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்ததால், அந்தச் சடலம் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதேபோன்று திங்கள்சந்தை அருகில் வட்டம் பகுதியில் இருக்கும் ஒரு முதியவரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து வட்டம் பகுதி உறவினர்கள் அந்த முதியவரின் சடலத்தை பெற்று கொள்வதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அப்போது மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த முதியவரின் சடலத்தை மருத்துவமனை பணியாளர்கள் மாற்றி கொடுத்துள்ளனர். அவர்களும் அந்த முதியவரின் சடலத்தை பெற்றுக்கொண்டு வட்டம் பகுதியில் அடக்கம் செய்துள்ளனர். அதன்பின்னர் மறவன் குடியிருப்பு பகுதியில் கொரோனா தெற்றினால் பலியான அந்த முதியவரின் சடலத்தை உறவினர்கள் பெற்று கொள்வதற்காக சென்றபோது சடலம் மாற்றிக் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால் கோபமடைந்த உறவினர்கள் முதியோரின் சடலத்தை உடனடியாக தரவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு விரைந்து சென்று அடக்கம் செய்யப்பட்ட அந்த சடலத்தை தோண்டி எடுத்து உறவினர்களிடம் ஒப்படைப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து வட்டம் பகுதியை சேர்ந்த அந்த முதியவரின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனிடையே மறவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அந்த முதியவரின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. அப்போது அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் அடக்கம் செய்த சடலத்தை தோண்டி எடுக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இரணியல் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ் ,மற்றும் கல்குளம் தாசில்தார் ஜெகதா ஆகியோர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அதன் பின்னர் மறவன்குடியிருப்பு முதியவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அதே பகுதியை சேர்ந்த வட்டம்பகுதி முதியவரின் சடலம் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த முதியவரின் உடல் வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கொரோனாவிற்கு பலியான முதியவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.