சுகாதார ஆய்வாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சுகாதார ஆய்வாளர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் வளாகத்தில் அந்த சங்கம் சார்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவரான தனபால் தலைமை தாங்கினார். இதனையடுத்து மண்டலச் செயலாளர் மணிவண்ணன் இதில் கலந்துகொண்டு உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார், மாநில தணிக்கையாளர் தங்கராஜ் உட்பட 100-க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த உண்ணாவிரத போராட்டத்தின் போது பல்வேறு தொற்று நோய்களிலிருந்து தமிழக மக்களை காக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 1,002 தனிப்பட்ட நிலை-1 சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் அதன் துறையில் தொடர்ந்து இயங்க ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் மண்டல செயலாளர் மணிவண்ணன் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
அதாவது “பொது சுகாதாரத்துறையில் பல்வேறு தனித்திட்டங்கள் உருவாக்கப்பட்டதால் 1,002 சுகாதார ஆய்வாளர்கள் பணி இடங்கள் இருந்தது. ஆனால் தற்போது அந்த பணியிடங்கள் திடீரென்று குறைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் இருந்த நிலையில் தற்போது 50 ஆயிரம் மக்கள் தொகையை கவனித்து வருகிறோம். கொரோனா தொற்று காலங்களிலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை கூட எடுக்காமல் பணியாற்றினோம்” என்று மணிவண்ணன் கூறினார்.