கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராணிபேட்டை உள்ள ரங்காபுரம் கூட்டுரோடு பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த பெண் உள்பட 2 பேரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் 2 பேரையும் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் ஜோதிகுமரன் மற்றும் தமிழ்செல்வி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரும் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்தாக காவல்துறையினரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் இருந்த 30 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 13 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.