மனைவியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் உள்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வானவரெட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஆறுமுகத்தின் மகள் பரமேஸ்வரியும் பார்த்திபன் என்பவரும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். அதன்பின் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பரமேஸ்வரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து விசாரணைக்காக ஆறுமுகம் காவல்நிலையத்திற்கு வந்த போது அங்கு நின்று கொண்டிருந்த பார்த்திபன் மற்றும் அவரின் தந்தை அண்ணாமலை, தாய் கிருஷ்ணவேணி, அண்ணன் பாரதிதாசன் ஆகியோர் கையால் தாக்கி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது பற்றி ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் பார்த்திபன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.