சீனாவில் கத்தி குத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டு வீழ்த்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீனாவில் பள்ளிக்கூடங்களுக்குள் புகுந்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தும் சம்பவமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சீனாவின் யுன்னான் மாகாணம் குன்மிங் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் வகுப்புகள் நடைபெற்ற போது, கத்தியுடன் வந்த ஒரு நபர் பள்ளிக்கு வெளியே நின்று கொண்டிருந்த மாணவர்களை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டார். அதன்பின்னர் பள்ளிக்குள் நுழைந்த அந்த நபர் அவரது கண்ணில் பட்ட அனைவரையும் கத்தியால் குத்திக் கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது, அந்த நபர் ஒரு சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்து கொண்டு போலீசாரை மிரட்டியுள்ளான்.
அதற்கு சிறுவனை விட்டுவிட்டு தங்களிடம் சரணடைந்து விடுமாறு அந்த நபரை போலீசார் எச்சரித்துள்ளனர். ஆனால் போலீசார் கூறியதை அந்த நபர் பொருட்படுத்தாத காரணத்தால், ஸ்னைப்பெர்ஸ் என்று அழைக்கப்படும் தொலைவிலிருந்து குறிபார்த்து சுடுவதில் திறமைவாய்ந்த போலீசாரை வரவழைத்தனர். அவர்கள் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபரை நெற்றியில் சுட்டு வீழ்த்தினர். இதனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அந்த மாணவரை மீட்டு அதன் பின் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த நபர் 56 வயதான வாங் என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் எதற்காக தாக்குதல் நடத்தினார் என்பது குறித்த விவரங்கள் தெரியாததால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.