ஐபிஎல் 15வது சீசன் 8வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. அதில் கொல்கத்தா அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
பஞ்சாப் இன்னிங்ஸ் :-
பஞ்சாப் கிங்ஸ் அணியில் முதலாவதாக களமிறங்கிய கேப்டன் அகர்வால், உமேஷ் யாதவ் வீசிய பந்து வேகத்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டத்தை இழந்தார். இதையடுத்து பனுகா ராஜபக்ஷா, தவன் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது 4-வது ஓவரில் ஷிவம் மாவி வீசிய பந்தில் ராஜபக்ஷா ஹாட்ரிக் சிக்ஸர், ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். மேலும் ஸ்கோர் 200+ ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ராஜபக்ஷா 31(9) அடுத்த பந்தில் ஆட்டமிழந்து நடையை கட்டினார். அதனைத் தொடர்ந்து லிவிங்ஸ்டன் (19), ஹர்பம்பிரித் ப்ரார் (14), ஷாருக்கான் 0 (5), ராஜ் பவார (11) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் 16 ஓவர்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி 110 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. அதில் 4/23 விக்கெட்டுகளை கைப்பற்றி உமேஷ் யாதவ் அசத்தினார்.
கொல்கத்தா இன்னிங்க்ஸ் :-
கொல்கத்தா அணியில் முதலாவதாக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 3(7), ஓடியின் ஸ்மித் பந்துவீச்சில் பெரிய ஸ்கோர் அடிக்க முடியாமல் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அஜிங்கிய ரஹானே 12(11), ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ராகுல் சஹார் வீசிய 7-வது ஓவரில் நிதிஷ் ராணா 0 (2) , ஷ்ரேயஸ் ஐயர் 26 (15) இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் பஞ்சாப் அணி பக்கம் போட்டி திரும்ப ஆரம்பித்தது. இந்த நிலையில் ஆண்ட்ரே ரஸல், சாம் பில்லிங்ஸ் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினர்.
அப்போது ஆண்ட்ரே ரஸல், ஹர்பிரித் ப்ரார் வீசிய 10ஆவது ஓவரில் 2 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். அதனை தொடர்ந்து ஆண்ட்ரே ரஸல், ஓடியன் ஸ்மித் வீசிய 12ஆவது ஓவரில் ஒரு பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என மொத்தம் 30 ரன்களை குவித்தார். இதனால் கொல்கத்தா அணிக்கு வெற்றி வாய்ப்பு எளிதான ஒன்றாக இருந்தது. அடுத்ததாக ஆண்ட்ரே ரஸல், அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சிலும் 14 ரன்கள் எடுத்தார். அதனால் 14.5ஆவது ஓவரிலேயே கொல்கத்தா அணி 141/4 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. அதிலும் 31 பந்துகளில் ரஸல் 8 சிக்ஸர்கள் உட்பட 70 ரன்கள் எடுத்து அசத்தினார்.