கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காளியம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இவர் மாலை நேரத்தில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். இதனையடுத்து நீண்ட நேரம் ஆகியும் காளியம்மாள் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்நிலையில் மறுநாள் காலையில் அருகில் உள்ள தோட்டத்து கிணற்றில் காளியம்மாள் மிதந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மடத்துக்குளம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளியம்மனின் உடலை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த மடத்துக்குளம் காவல்துறையினர் காளியம்மாள் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.