நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச் சென்ற என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சென்னிமலைபாளையம் பகுதியில் ஜெகதீஷ் செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீபக் பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் நத்தக்காடையூர் பகுதியில் உள்ள பில்டர்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீபக் பிரசாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது தீபக் பிரசாரத்திற்கு நீச்சல் தெரியாததால் தண்ணீர் கேன் ஒன்றை இடுப்பில் கட்டிக்கொண்டு நண்பர்களுடன் கிணற்றில் இறங்கி குளித்துள்ளார். அதன்பின் படிக்கட்டில் இருந்து மேலே ஏறி வரும்போது எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்துள்ளார்.
இதனை பார்த்த நண்பர்கள் தீபக் பிரசாத்தை கிணற்றில் குதித்து காப்பாற்ற முயன்றனர். ஆனால் மீட்க முடியாததால் இதுகுறித்து காங்கேயம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் இறந்து கிடந்த தீபக் பிரசாத்தின் உடலை மீட்டு கொண்டு வந்தனர். இதனை பார்த்த தீபக் பிரசாத்தின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதனையடுத்து தீபக் பிரசாத்தின் உடலை கைப்பற்றி காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காங்கேயம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.