தென் கொரியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை ஒத்திவைக்க வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்
வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே பல வருடங்களாக மோதல் நிலை இருந்து வந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு இரண்டு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசியதை தொடர்ந்து பகை உணர்வு குறைந்து இணக்கமான சூழல் உருவாகியது. ஆனால் தற்போது மீண்டும் தென் கொரியாவிற்கும், வடகொரியாவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. வடகொரியாவில் இருந்து தப்பி தென் கொரியா சென்றவர்கள் துண்டு பிரசுரங்களை வடகொரியா அரசை விமர்சிப்பது போன்று தயார் செய்து ஹீலியம் பலூன் மூலமாக வட கொரியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சகோதரியான கிம் யோ ஜங் தென்கொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். அதன்படி தென் கொரியாவின் தகவல் தொடர்பு அலுவலகம் தகர்க்கப்பட்டது. அதோடு வடகொரியா எல்லைப் பகுதியில் ராணுவத்தை பலப்படுத்தி வந்தது. இதனால் தீபகற்பத்தில் பதட்டம் அதிகரித்தது. இந்நிலையில் வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ, தென் கொரியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை அதிபர் கிம் ஜாங் உன் நிறுத்தியதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த ஊடகம் வெளியிட்ட செய்தியில் “அதிபர் கிம் ஜாங் உன் தலைமையிலான ராணுவ ஆணைய கூட்டம் காணொளி காட்சி மூலம் நடந்தது. அப்போது நாட்டின் ராணுவத்தை பலப்படுத்துவது குறித்து விவாதம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளிடையே இருந்துவரும் பதற்றத்தை நினைத்து தென்கொரியாவுக்கு எதிராக மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகளை ஒத்திவைக்க அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு பிறப்பித்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென் கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் கூறுகையில் “வடகொரியாவின் அறிக்கைகளை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்” என கூறியுள்ளார். இதுகுறித்து தென் கொரியாவின் முன்னாள் ராணுவ வீரர் கூறுகையில் வடகொரியாவின் இந்த நடவடிக்கை தற்காலிகமானதே, அவர்கள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியதாக கூறவில்லை ஒத்திவைப்பதாகவே தெரிவித்துள்ளனர். எனவே தென்கொரியா விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.