வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தங்கள் நாட்டில் கொரோனா பரவியதற்கு தென் கொரியா தான் காரணம் என்று எச்சரித்திருக்கிறார்.
உலக நாடுகளை கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் புரட்டி போட்டது. எனினும் வடகொரியா மட்டும் அதிலிருந்து தப்பித்து விட்டது. தங்கள் நாட்டில் ஒரு நபருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை என்று அறிவித்தது. தடுப்பூசிக்கும் அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அந்நாட்டிலும் கொரோனா தொற்று பரவ தொடங்கியது.
எனவே, சீனாவிடமிருந்து மருத்துவ உதவியை பெற்றது. தற்போது, வடகொரியா கொரோனா தொற்றிலிருந்து முழுவதுமாக மீண்டு விட்டதாக கிம் ஜாங் உன் அறிவிப்பு வெளியிட்டார். இந்நிலையில், அவரின் சகோதரியான கிம் யோ ஜோங், தென்கொரியாவின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தார்.
பலூன்களை பறக்கச் செய்வது, துண்டு பிரசுரங்களை வீசுவது போன்ற நடவடிக்கைகளால் மனிதர்களுக்கு எதிரான குற்றத்தை தென்கொரியா செய்து கொண்டிருக்கிறது. உலக சுகாதார மையம், மாசுபட்ட பொருட்கள் மூலம் கொரோனா பரவக்கூடிய ஆபத்து அதிகமிருப்பதாக எச்சரித்திருந்தது.
எனினும் அதனை தென்கொரியா கருத்தில் கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல், இந்த நடவடிக்கையை தென்கொரியா மேலும் தொடர்ந்தால் அதற்கு கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.