தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் போண்டாமணி. இவர் பல முன்னணி நடிகர்களின் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு தற்போது 2 சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தற்போது போரூர் பகுதியில் உள்ள அவருடைய வீட்டில் இருக்கிறார். இவரை முன்னாள் அமைச்சர்கள் பெஞ்சமின் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து அதிமுக கட்சியின் சார்பில் 1 லட்ச ரூபாயை மருத்துவ செலவுக்காக கொடுத்துள்ளனர். அதன்பின் போண்டாமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது, நான் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் என்னை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அதன் பிறகு முதல்வரின் சார்பில் அவருடைய உதவியாளர்கள் அவ்வப்போது எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கிறார்கள். நான் உழைத்த கட்சியின் சார்பில் என்னிடம் வந்து யாருமே நலம் விசாரிக்காதது மிகவும் மன வருத்தமாக இருக்கிறது. இந்நிலையில் அதிமுக கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் பெஞ்சமின் உட்பட கட்சி நிர்வாகிகள் என்னுடைய வீட்டிற்கு வந்து பண உதவி அளித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
எனக்கு உதவி செய்த நடிகர்கள் மற்றும் நடிகர் சங்கத்திற்கு மிக்க நன்றி. நான் அஜித், விஜய், ரஜினி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதால் என்னுடைய துறை சார்ந்தவர்கள் கண்டிப்பாக எனக்கு உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறினார். மேலும் என்னுடைய உடல்நலம் முழுமையாக குணமடைந்த பிறகு மீண்டும் படங்களில் நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்றும் கூறினார்.