பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்ற நிலையில் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து டெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் நரேந்திர சிங் தோமர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அதில், கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என கூறியுள்ளனர்.
இதனால் 14 வகையான கரீப் பருவம் பெறுவதற்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்ந்துள்ளது. மக்காச்சோளம், துவரம் பருப்பு, பாசிப் பயிறு உள்ளிட்ட பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தியுள்ளதால் விவசாயிகளுக்கு 50 முதல் 83 சதவீதம் வரை குவிண்டாலுக்கு கூடுதலாக விலை கிடைக்கும் என தகவல் அளித்துள்ளனர். ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் விளை பொருட்களை விற்பனை செய்ய எந்தவித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படாது என தெரிவித்துள்ளனர். சிறுகுறு, நடுத்தர நிறுவனங்களின் வரையறை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 2 லட்சம் சிறுகுறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் ஏற்றுமதியில் 6 கோடி சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் பங்கு 48% ஆகும். எனவே சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு பங்கு முதலீட்டு உதவியாக ரூ.50 ஆயிரம் கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளனர். சாலையோர வியாபாரிகளுக்கு 7% வட்டி சலுகை அளிக்கப்படும், இதன் மூலம் 50 லட்சம் சாலையோர விவசாயிகள் பயன் அடைவார்கள் என தகவல் அளித்துள்ளனர். மேலும் நாட்டில் வேலை வாய்ப்பை உருவாக்குவதில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது, சிறுகுறு நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிட உதவும் என கூறியுள்ளனர்.