கென்யா நாட்டில் வரும் 9-ஆம் தேதி அன்று ஒரே சமயத்தில் மூன்று தேர்தல்கள் நடக்க இருப்பதால் வேட்பாளர்கள் பொதுத் கழிவறைகளை சுத்தம் செய்து மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார்கள்.
கென்யா நாட்டில் வரும் ஒன்பதாம் தேதி அன்று ஆளுநர் தேர்தல், நாடாளுமன்ற மற்றும் அதிபர் தேர்தல்கள் ஒரே சமயத்தில் நடக்க இருக்கிறது. இந்த தேர்தல்களில் களமிறங்கியிருக்கும் அரசியல்வாதிகள் பிரச்சாரத்தில் மக்களை கவர்வதற்காக பல பணிகளை செய்து வருகிறார்கள். டீக்கடையில் நின்று டீ போடுவது, பரோட்டா கடையில் பரோட்டா போடுவது போன்று அல்லாமல் கென்யா நாட்டு வேட்பாளர்கள் களத்தில் இறங்கி வேலை செய்து மக்களை கவர்ந்துள்ளனர்.
அதாவது, துர்நாற்றம் வீசக்கூடிய பொதுக் கழிவறைகளை சுத்தப்படுத்துவது, வீடுகளில் பெண்களுக்கு காய்கறிகள் வெட்டி கொடுப்பது, வீடுகளுக்கு சென்று கார்களை கழுவி கொடுப்பது, இரவு விடுதிகளில் மதுபானங்கள் பரிமாறுவது போன்று பல பணிகளை செய்திருக்கிறார்கள்.
பொதுவாகவே அரசியல்வாதிகள் என்றால் விளம்பரத்திற்காக ஏதேனும் பணிகளை செய்வார்கள் என்பது மக்களுக்கு தெரியும். எனவே, மக்களை உண்மையாக ஈர்க்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான பணிகளில் இறங்கி ஆச்சரியப்பட வைத்துள்ளனர், கென்ய நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள்.