கவினின் புதிய திரைபடத்தில் முன்னணி நடிகர்கள் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார். சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான ”லிப்ட்” திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தாக, இவர் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தயாரிக்கும் ”ஊர்குருவி” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது உதவி இயக்குனரான கணேஷ் பாபு என்பவர் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ரொமான்ஸ் கதையில் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் பிரதீப் அண்டனி, அபர்ணாதாஸ், ஹரிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் . மேலும் மார்ச் 5-ஆம் தேதி தொடங்கி இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் சென்னையை சுற்றியுள்ள இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யாவும், நடிகர் பாக்கியராஜும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இப்படத்தில் கவினின் பெற்றோர்களாக நடிக்க உள்ளார்களாம். கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான ராசுக்குட்டி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த இவர்கள் 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கவின் படம் மூலம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.