பெங்களூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, இந்திய நாட்டின் வரலாற்றில் முதன் முதலாக வாக்காளர்களின் தரவுகளை திருடிய ஒரே மாநிலம் கர்நாடகா. இது போன்று வேறு எந்த மாநிலத்திலும் நடந்ததே கிடையாது. கர்நாடக மாநில மக்களின் உரிமைகளை பறிக்கும் செயலில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. சிலுமே நிறுவனத்தின் மூலமாகத்தான் வாக்காளர் தரவுகளை திருடியுள்ளனர்.
இதற்கு மூளையாக செயல்பட்டவர் முதல்வர் பசுவராஜ் பொம்மை. எனவே முதல்வர் பசுவராஜ் பொம்மை மற்றும் மாநகராட்சி கமிஷனர் மீது உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் கூறும் புகார்களுக்கு ஆதாரம் இல்லை என்று கூறிய நிலையில், தற்போது முதல்வரின் உத்தரவின் பேயரிலேயே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பாஜக கட்சியை சேர்ந்த எம்எல்ஏ நந்தீஷ் ரெட்டி சிலுமே நிறுவனத்திற்கு 18 லட்சம் ரூபாய் வாக்காளர் தரவுகளை திருடுவதற்காக கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக முதல் மந்திரி பசுவராஜ் பொம்மை கர்நாடக மக்களுக்கு உரிய முறையில் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் தாங்கள் செய்த தவறுகளை ஏற்றுக் கொண்டு முதல்வர் பசுவராஜ் பொம்மை உட்பட சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியினர் பாஜக மீது சுமத்திய குற்றச்சாட்டு தற்போது அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.